பக்கம் எண் :

 23. திருக்கோலக்கா459


243. மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 5

244. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாத மடைந்து வாழ்மினே. 6

__________________________________________________

5. பொ-ரை: ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.

கு-ரை: திரிபுரம் எரித்த செல்வன் எழுந்தருளியுள்ள கோலக்காவை இடைவிடாது நினைக்கப் பாவம் பறையும் என்கின்றது.

மாது - உமாதேவி. நோக்கினார்கண்ணுக்கு இனிமையும், பிறவியான் வரும் மயக்கம் அறுக்கும் மருந்துமாகலின் இறைவி மயிலார்சாயலள் ஆயினள். எயிலார் - திரிபுராதிகள். பயிலா நிற்க - இடைவிடாது தியானிக்க.

6. பொ-ரை: ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக் கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.

கு-ரை: இது வினைகெட வேண்டுவீர் கோலக்காவின் அடிகளை அடைந்து வாழுங்கள் என்கின்றது.

வெடிகொள்வினை - வாழை சிங்கம் வெடித்தது என்றாற் போல ஒரு முதலிலிருந்து பலவாகப் பல்கும்வினை. கடி - மணம்.