பக்கம் எண் :

500திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


318. வலியின் மதிசெஞ் சடைவைத் தமணாளன்
புலியின் னதள்கொண் டரையார்த் தபுனிதன்
மலியும் பதிமா மறையோர் நிறைந்தீண்டிப்
பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே. 3

319. கயலார்தடங்கண் ணியொடும் மெருதேறி
அயலார் கடையிற் பலிகொண்டவழகன்
இயலா லுறையும் மிடமெண் டிசையோர்க்கும்
புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே. 4

.__________________________________________________

கு-ரை: இது திரிபுரம் எரித்த பெருமான் தேவியோடு எழுந்தருளியிருக்கும் இடம் புகலி என்கின்றது. ஒன்னார் - பகைவர். வேடந்தன்னால் - வேடத்தோடு. உறைவாவது - உறையும் இடமாவது புகலி நகர் என்க.

3. பொ-ரை: கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலி நகராகும்.

கு-ரை: இது மதிசூடிய மணாளனாகிய, புலித்தோலரையார்த்த பெருமான் பதி புகலி என்கின்றது. வலியில் மதி - தேய்ந்து வலி குன்றிய பிறைமதி. தளர்ந்தாரைத் தாங்குதல் இறைவனியல்பு என்பது உணர்த்தியவாறு. அதள் - தோல்.

4. பொ-ரை: கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபெருமான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார் மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.

கு-ரை: இடபவாகனத்தில் அம்மையப்பராய், அயலார் மனைவாயிலில் பலிகொள்ளும் இறைவன்பதி புகலி என்கின்றது. கயலார் தடங்கண்ணி - மீனாட்சி. அயலார் - கன்மப்பிரமவாதிகளான தாருகாவனத்து ரிஷிகள். கடை - மனைவாயில். இயலால் - அழகோடு.