பக்கம் எண் :

 30. திருப்புகலி501


320. காதார் கனபொற் குழைதோ டதிலங்கத்
தாதார் மலர்தண் சடையே றமுடித்து
நாதா னுறையும் மிடமா வதுநாளும்
போதார் பொழிற்பூம் புகலிந் நகர்தானே. 5

321. வலமார் படைமான் மழுவேந் தியமைந்தன்
கலமார் கடனஞ் சமுதுண் டகருத்தன்
குலமார் பதிகொன் றைகள்பொன் சொரியத்தேன்
புலமார் வயற்பூம் புகலிந் நகர்தானே. 6

__________________________________________________

5. பொ-ரை: காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.

கு-ரை: குழையுந் தோடுங் காதிற் கலந்திலங்கச் சடையை ஏறமுடித்தநாதன் உறையும் இடம் புகலி என்கின்றது.

கன பொன்குழை - பொன்னாலாகிய கனவியகுழை. தாதார் மலர் - மகரந்தம் பொருந்திய மலர். ஏறமுடித்து - உயரத் தூக்கிக் கட்டி. நாதன் என்ற சொல் எதுகைநோக்கி நாதான் என நீண்டது. தண்சடை என்றமையால் குழை யணிந்த பாகத்திற்கேற்பக் கங்கையணிந்து தண்ணிய சடையான செம் பகுதிச் சடையை யுணர்த்தியது.

6. பொ-ரை: வெற்றி பொருந்திய சூலப்படை, மான் மழு, ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.

கு-ரை: இது மான் மழுவேந்திய மைந்தன், கடல் நஞ்சமுண்ட தலைவன் பதி புகலி என்கின்றது. வலம் ஆர்படை - வெற்றி பொருந்திய சூலப்படை. கலம் - மரக்கலம். கருத்தன் - தலைவன். குலமார் பதி - மக்கள் கூட்டம் செறிந்த நகரம். புலம் - அறிவு.