பக்கம் எண் :

502திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


322. கறுத்தான் கனலான் மதின்மூன் றையும்வேவச்
செறுத்தான் றிகழுங் கடனஞ் சமுதாக
அறுத்தா னயன்றன் சிரமைந் திலுமொன்றைப்
பொறுத்தா னிடம்பூம் புகலிந் நகர்தானே. 7

323. தொழிலான் மிகுதொண் டர்கள்தோத் திரஞ்சொல்ல
எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற
கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப்
பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே. 8

__________________________________________________

7. பொ-ரை: மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்தவனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.

கு-ரை: புரம் எரித்து, நஞ்சுண்டு, பிரமன் சிரங்கொய்து வீரம் விளக்கிய தலைவன் பதி புகலி என்கின்றது. இப்பாட்டு அடி தோறும் பொருள்முற்றி வந்துள்ளது.

கறுத்தான் - சினந்தவன். செறுத்தான் - கண்டத்தில் அடக்கியவன். வேவக் கறுத்தான், அமுதாகச் செறுத்தான். ஒன்றையறுத்தான், அதைப் பொறுத்தான் இடம் புகலி என முடிவு செய்க.

8. பொ-ரை: தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப் போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவபிரான் உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.

கு-ரை: தொண்டர் தோத்திரஞ்சொல்ல இராவணனைச் செற்ற திருவடியையுடைய சிவன்பதி புகலி என்கிறது.

தொழிலால் மிகு தொண்டர்கள் - சரியை, கிரியையாதிகளால் மிக்க அடியார்கள். எழில் - எழுச்சி; அழகுமாம். கண்டல் - தாழை.