பக்கம் எண் :

 31. திருக்குரங்கணின்முட்டம்503


324. மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத்
தீண்டா நடமா டியவேந் தல்தன்மேனி
நீண்டா னிருவர்க் கெரியா யரவாரம்
பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே. 9

325. உடையார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக்
கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே. 10

__________________________________________________

9. பொ-ரை: இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால் பிரமர் பொருட்டுத் தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.

கு-ரை: சுடலைப் பொடி பூசி, மயானத்தாடி, மாலயனுக்காக அக்கினி மலையாய் நீண்டு, அரவை யாரமாகப் பூண்டு விளங்கும் இறைவன் பதி புகலி என்கின்றது. மாண்டார் - இறந்தவர். பொடிபூசி மயானத்தாடி என்றது எல்லாரும் அந்தம் எய்த, தாம் அந்தம் இல்லாதிருப்பவன் என்பதை விளக்கியது. ஏந்தல் - தலைவன். தன்மேனி இருவர்க்கு எரியா நீண்டான் எனக் கூட்டுக. அரவு ஆரம் பூண்டான் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்.

10. பொ-ரை: கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.

கு-ரை: புறச்சமயிகளாகிய சமணர் புத்தர் வேதங்கட்குக் கிடையாத சிவனார்பதி புகலி என்கின்றது. உடையார் துகில் - உடுக்கத்தக்க துகில். போர்த்து - போர்வையாகப் போர்த்து. கையர் - கீழ்மக்கள். அடையாதன சொல்லுவர் - பொருந்தாதவற்றைச் சொல்லுவார்கள். ஆதர்கள் - கீழ்மக்கள். ஓத்து - வேதத்தை; என்றது பிடகம் முதலியவற்றிற்கு. வேற்றுமை மயக்கம். கிடையாதவன் - அகப்படாதவன். பூகம் - பாக்குமரம்.