326. இரைக்கும் புனல்செஞ்
சடைவைத் தவெம்மான்றன்
புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை
வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே.
11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: ஆரவாரிக்கும் கங்கை
நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய
சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட
அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன்
உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும்
தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.
கு-ரை: இம்மாலை பத்தும் தனக்கே உரியதாக்கவல்லவர்
நல்லவராவர் என்கின்றது. புரைக்கும் - உயர்ந்திருக்கும்.
வரைக்கும் தொழில் - தம்மளவினதாக்கிக் கொள்ளுந்
தொழில். எழுதுவிக்கும் தொழில் என்றுமாம்;
அளவுபடுத்தி யுரைக்கும் தொழில் எனவுமாம்.
திருமயிலைப் புராணம்
வீழியிதழ் மடந்தைதன்மெய் யத்தியைப்பெண்
ணரசாக்கும் வேந்தை வாவு
மாழிபுடை சூழ்மதுரை யமணிருள்கீண்
டெழுந்தசுட ரவனை யவ்வூர்
வாழிறைவன் வெப்பகல வருளமுதம்
பொழிந்தவியன் மழையை ஞானக்
காழிநகர் மறைவேந்தைக் கவுணியர்தங்
குலக்கொழுந்தைக் கருதி
வாழ்வாம்.
- அமிர்தலிங்கத்
தம்பிரான்.
|
|