328. விடைசேர் கொடியண் ணல்விளங்
குயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில்
குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம்
உடையா னெனையா ளுடையெந் தைபிரானே. 2
329. சூலப் படையான் விடையான்
சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே. 3
__________________________________________________
2. பொ-ரை: உயர்ந்து விளங்கும் மாடங்களின்
கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே
அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த
குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய
சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.
கு-ரை: இது இத்தலமுடைய பெருமானே என்னையாளுடைய
பிரான் என்கின்றது. மாடக்கடைசேர் கருமென்குளத்து
ஓங்கிய காட்டில் - மாடங்களின் கடைவாயிலைச் சேர்ந்துள்ள
கரிய மெல்லிய குளத்தால் சிறந்த கட்டிங்களிலே.
குடையார் புனல் மல்கு - குடைதற்குரிய நீர் நிறைந்த;
அணில் முட்டம் என்க.
ஆளுடைபிரான் என்பதால் எனக்கும் அவனுக்கும்
உள்ள தொடர்பு. அநாதியேயான ஆண்டான் அடிமைத்தன்மையென
அறிவித்தது. எந்தை என்றது ஆதியாயிருந்து, அடித்தும்
அணைத்தும் அருள்வழங்கலின். பிரான் என்றது தன்வழிநின்று
ஏவல்கொள்ளுந் தலைவனாக இருத்தலின்.
3. பொ-ரை: அழகிய சோலைகளால் சூழப்பெற்ற
குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும்
சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான்சூலப்படையையும்
விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன்.
காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.
கு-ரை: இது இத்தலத்திறைவன் சூலப்படையான்
விடையான் நீற்றான் காலகாலன் என அடையாளமும்,
அருளுந்திறமும் அறிவிக்கின்றது. கோலம் - அழகு. ஏலம்
- மயிர்ச்சாந்து.
|