359. அரவார் புனலன் பிலாலந்
துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: பாம்புகள் வாழும் நீர்
வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத
மக்கள் வாழும் சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்
பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு
பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள்
ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.
கு-ரை: இப்பாடல் பத்தினையும்
இசையோடு பாடவல்லார் விண்ணின்பத்தை மேவுவர்;
அவர்க்கு வீட்டின்பமும் எளிதாம் என்கின்றது. கரவாதவர்
காழி - வஞ்சனை இல்லாத தவத்தவர் மேவியுள்ள காழி.
ஆலந்துறை தன்மேல் பரவு ஆர் தமிழ் எனக்கூட்டுக.
வானிடை விரவு ஆகுவர் - விண்ணிற்கலப்பர். அரவார்
புனல் - பாம்பை ஒத்த புனல் (நெளிந்து விரைந்து
வருதல்).
காசி ரகசியம்
திருமடத் தமணர்இட்ட செய்யதீ
வழுதிமேனி
உருகிடப் பற்றியந்நின் றொல்லையவ் அமணரேடு
கருகிடப் பற்றியன்னார் வயிற்றுளுங் கலப்பச்செய்த
பொருவரு முத்திச்செல்வர் பொன்னடி சென்னிசேர்ப்பாம்.
- மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
|
|