பக்கம் எண் :

 34. சீகாழி521


357. வணங்கிம் மலர்மே லயனுந் நெடுமாலும்
பிணங்கி யறிகின் றிலர்மற் றும்பெருமை
சுணங்கும் முகத்தம் முலையா ளொருபாகம்
அணங்குந் நிகழன் பிலாலந் துறையாரே. 9

358. தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே. 10

__________________________________________________

9. பொ-ரை: தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும், சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது, தம்முட் பிணங்கித் தேடி அறியாதவராயினர். அப்பெருமான், சுணங்கு பொருந்திய முகப்பினைஉடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார்.

கு-ரை: இது உமையொருபாகர் ஆலந்துறையார் என்கின்றது. வணங்கிமலர்மேல் என்பது சந்தம்நோக்கி மகரம் மிகுந்தது. பிணங்கி உம் பெருமையறிகின்றிலர் எனக் கூட்டுக. மற்று அசை. சுணங்கு முகத்து முலையாளாகிய அணங்கு ஒரு பாகம் நிகழ் ஆலந்துறையார் எனக் கூட்டுக. ஒரு பாகம் இருந்தும் சுணங்குபூக்கும் முலையாள் என்றது அம்மையின் மாறாத காதலை அறிவித்தவாறு. சுணங்கு பெண்களுக்குண்டாகும் தேமல். அணங்கு - தெய்வப்பெண்.

10. பொ-ரை: தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.

கு-ரை: இது அன்போடு பூவும் நீரும்கொண்டு அடிபணிவாரை அறிபவர் ஆலந்துறையார் என்கின்றது. தறியார் துகில் - தறியில் நெய்த ஆடை. நெறியா உணரா - முறைமைப்படி உணர்ந்து கொள்ளாத. நிலைக்கேடினர் - கெட்ட நிலையை யுடையவர்கள். வீழுமவர் - விரும்பித் தொழுமடியார்.