பக்கம் எண் :

520திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


355. செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே. 7

356. விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே. 8

_________________________________________________

ஆகிய எனப் பிரிக்க. ஆர் சுவை - அரிய அமுதம். வேறு ஆர் - வேறாகப் பெயர்ந்த.

7. பொ-ரை: முடை நாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

கு-ரை: இது இறைவன் புகழைச் சொல்லி அடியார்கள் வழிபடும் ஆலந்துறையார் என்கின்றது. செடி - முடைநாற்றம். செடியார் தலையில் பிச்சை ஏற்று இனிதுண்டார் என்பது இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை உணர்த்தியது. படி - தன்மை, அடியார், சீரைத் தூவிநின்று ஏத்தித் தொழும், ஆலந்துறையார் என்க.

8. பொ-ரை: ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித் தேரைக் கொண்ட இலங்கையர் குலத் தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில் ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

கு-ரை: இது நீலகண்டனாய் அரவம் அணிந்து இராவணனை அடர்த்தவன் ஆலந்துறையான் என்கின்றது. விடத்தார் திகழும் மிடறன் - ‘கறைமிடறு அணியலும் அணிந்தன்று‘ என்ற கருத்தை ஒப்பு நோக்குக. படத்து ஆர் அரவம் - படம் பொருந்திய பாம்பு ஆதி - முதல்வனே: அண்மைவிளி.