பக்கம் எண் :

 35. திருவீழிமிழலை527


369. சமண்சாக் கியர்தா மலர்தூற்ற
அமைந்தா னுமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 10

370. நலமா கியஞானசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமையம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே தியானித்து, மலர் தூவித் தொழுதலே சிறந்த தொண்டாகும்.

கு-ரை: இது சமண் முதலியோர் அலர் தூற்ற அடியார் மலர் தூவுதல் தொண்டு என்கின்றது. அலர்தூற்ற - பழி சொல்ல. உமையோடு உடன் அன்பாய் அமர்ந்தான். அம்மையொடு ஒருசேர ஆசனத்து அன்பாய் அமர்ந்தான் என்க. காழி சுமந்தார் - காழியைத் தம் மனத்துத் தியானித்தவர்கள்.

11. பொ-ரை: நன்மையை மக்கட்கு நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப் பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

கு-ரை: காழியைத் தமது நிலைத்த இடமாக நினைந்த பெருமானது பாடலில் வல்லவர்கள் வானடைவர் என முடிக்க.