பக்கம் எண் :

546திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


405. உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. 2

406. ஊனத் திருணீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணும்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே. 3

__________________________________________________

2. பொ-ரை: வலிமை பொருந்திய கொடிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

கு-ரை: யானைத்தோல் போர்த்த பரமன் உறைம்புதி மயிலாடுதுறை என்கின்றது. உரம் -வலிமை.

குரவம் - குராமலர். சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.

3. பொ-ரை: இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப் பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.

கு-ரை: உயிர்களை அணுவாக்கும் ஆணவமலம் நீங்க வேண்டில் ஞானப்பொருளைத் துணைக்கொண்டு மயிலாடு துறையைப் பேணுங்கள் என்கின்றது.

ஊனத்து இருள் - குறைபாட்டை உண்டாக்கும் மலம். குறைபாடாவது சிவத்தோடொன்றிச் சிவமாகும் ஆன்மாவை மறைத்து அணுவாக்கும் குறைபாடு. தேன் ஒத்து இனியான் - முத்தியில் ஒன்றிய காலத்துத் தேனை ஒத்து இனியவன், "தேனைப் பாலை யொத் திருப்பன் முத்தியினிற் கலந்ததே" என்றதும் காண்க. அமரும், சேர்வு ஆன. மயிலாடுதுறையை அடிபேணும் எனக் கூட்டுக.