பக்கம் எண் :

 38. திருமயிலாடுதுறை547


407. அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேற்
றுஞ்சும் பிணியா யினதானே. 4

408. தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே. 5

__________________________________________________

4. பொ-ரை: ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல்வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.

கு-ரை: பொறிவாயிலைந்தவித்த வீரன் மேவிய மயிலாடுதுறையை மனமொன்றித் தியானிப்பவர்களின் பிணிகள் அழியும் என்கின்றது. அஞ்சு ஒண்புலனும் - தத்தமக்கேற்ற பொறிகளைக் கவரும் ஒள்ளிய ஐந்து புலன்களையும்.

செற்ற - கெடுத்த. மஞ்சன் - இது மைந்தன் என்பதன் போலி. வலிமையுடையோன் என்பதாம். நினைந்து எழுவார் - துயில்விட்டு எழும்போதே தியானித்து எழுபவர்கள். பிணி -பிறவிப்பிணி.

5. பொ-ரை: குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.

கு-ரை; இது மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்க்கு என்றும் அருள் உளதாம் என்கின்றது. தணியார் மதி - குளிர்ந்தமதி. அணியார்ந்தவர் - அணுகியவா.

மணியான் - மணிபோன்றவன். பிணிதீர்ப்பன மணி மந்திரம் ஒளஷதம் என்ற மூன்றுமாதலின் அவற்றுள் ஒன்றாய மணிபோன்றவன் என்றார். பிணியாயின தீர்த்து அருள்செய்யும் மணியான், செஞ்சடையான் தன் மயிலாடுதுறை அணியார்ந்தவர்க்கு என்றும் அருள் (உளதாம்) என முடிக்க.