409. தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. 6
410. அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும்ம புரிநூ லர்கள்கூடிச்
வணங்கும் மயிலா டுதுறையே. 7
411. சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே. 8
__________________________________________________
6. பொ-ரை: தொண்டர்களாயுள்ளவர்கள்
கூடிஇசை பாடியும், தரிசித்தும் துதிக்கும்
சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள்
வேதங்களை ஓதித் துதிக்க, வண்டுகள் ஒலிக்கும்
சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.
கு-ரை: தொண்டர்கள் கூடித் துதிபாடும்
ஊர் என்கிறது. துதிசெய்பவன் - துதிசெய்யப்படுமவன்.
பண்டும் - முன்பும்.
7. பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாக
விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர்,
முப்புரிநூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை
ஆகும்.
கு-ரை: இது மயிலம்மையை ஒருபாகங்கொண்டு
அருள் செய்த ஊர் என்கின்றது. அணங்கு - மயிலம்மை.
இணங்கி - பொருந்தி. நுணங்கும் - துவளும். புரிநூலவர்கள்
- முப்புரி நூலையுடைய அந்தணர்கள்.
8. பொ-ரை: பிரமகபாலத்தைக் கையில்
ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை
கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை
நெரியுமாறு அடர்த்த நன்மை யாளனாகிய அப்பெருமானை
அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.
|