பக்கம் எண் :

552திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


416. சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச்

சங்கவெண்டோடு சரிந்திலங்கப்

புடைதனிற் பாரிடஞ்சூழப்

போதருமா றிவர்போல்வார்

உடைதனினால்விரற் கோவணவாடை

யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை

விடைதனை யூர்திநயந்தார்

வேட்கள நன்னகராரே. 2

__________________________________________________

பிரபஞ்சத்திற்கெல்லாம் இறுதிசெய்பவனும், முதலாய் நின்று படைப்பவனும் ஆகிய பெருமையிற் சிறந்தவன். "அந்தம் ஆதி" சிவஞான போதம். ஆரழல் - பிறரால் பொறுத்தற்கரிய தீ. மந்த முழவம் - மந்த ஸ்தாயியில் அடிக்கப்பெறுகின்ற மத்தளம். மலைமகள் - உமாதேவி. நோயுண் மருந்து தாயுண்டாங்கு இறைவனது ஆனந்தத்தாண்டவத்தை மலைமகள் கண்டு ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்பப் பயன் கொள்ளச் செய்கின்றாள் ஆதலின் உமை காண நின்றாடி என்றார். நகரார் ஆகிய அண்ணல், இலங்க, இயம்ப, ஆடி, ததும்ப, பூசும் என முடிக்க.

குருவருள்: "வேட்கள நன்னகராரே" என்பதற்கு ஏற்ப அவ்வருள் வாக்கின்படி இன்று இத்தலம் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலை நகராக விளங்குவது காண்க.

2. பொ-ரை: திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.

கு-ரை: இறைவன் சடைமுடித்து, சங்ககுண்டலந்தாழ, பூதந்தாழப் போதருவர்; அவருக்கு உடை கோவணம்; உண்பது பிச்சை; ஊர்தி இடபம் என்கின்றது. ஏறமுடித்து - எடுத்துக்கட்டி, சரிந்து - தாழ்ந்து. பாரிடம் - பூதம். போல்வார் -ஒப்பில் போலி. ஊர்தி - வாகனம். கோவணம் நால்விரல் அகல முடையதாயிருத்தல் வேண்டும் என்பது மரபு ஆதலின் நால் விரல் கோவணம் என்றார்.