பக்கம் எண் :

56முதல் பதிப்பின் முகவுரை(முதல் திருமுறை)


விளக்கப்பெற்றுள்ளன. செந்தில்நாத அய்யர் அவர்கள் எழுதிய தேவார வேதசாரத்தைத் துணையாகக்கொண்டு வேத, உபநிடத, புராணங்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகள் தேவையான இடங்களில் தரப்பெற்றுள்ளன. சிவஞானபோத மாபாடியத்திலும், வெள்ளியம்பலவாண மாபாடியத்திலும் முதற்றிருமுறைப் பாடல் சிலவற்றிற்கு எழுதிய உரைக்குறிப்புக்களை ஒட்டி அங்கங்கே குறிப்புக்கள் தரப்பெற்றுள்ளன. இங்ஙனம் இவ்வுரை இனிது நிறைவேறியது. முதற்றிருமுறைப் பதிப்பு முற்றுப்பெற்றது. ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலியவற்றிற்குப் பழைய உரை அப்படியே எடுத்துக்கொள்ளப்பெற்றது.

முற்சேர்க்கை:

இதன் தொடர்புரையாக நூலின் தொடக்கத்தில் தலங்களைப் பற்றிய புராணவரலாறுகளும், மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், மடம் இவற்றின் பெயர்களும், சிறப்புக்களும், வழிபட்டு நலம்பெற்றோர் வரலாறுகளும் சேர்க்கப்பெற்றுள்ளன. சிறப்பாக, நமது தமிழ் மன்னர்களுடைய தெய்வபக்தி, திருமுறையன்பு, திருமுறை ஆசிரியர்களிடம் இவர்களுக்குள்ள இணையீடற்ற பக்தி, ஆட்சிச் சிறப்பு, வெற்றி, தோல்வி முதலிய வரலாற்றுக் குறிப்புக்கள், தானச்சிறப்பு இவற்றைக்காட்டும் கல்வெட்டுக் குறிப்புக்களும் சேர்க்கப்பெற்றுள்ளன. இவற்றால் நமது சிவாலயங்களின் தொன்மையையும், நமது தமிழ்மக்கள் தெய்வபக்தியைத் துணைக்கொண்டே தமது புகழையும், வாழ்வையும் வளர்த்துவந்தமையையும் அறியலாம்.

இவ்வண்ணம் இவ்வெளியீடு இத்துணைச் சிறப்புக்களுடன் வெளிவர உறுதுணையாயிருந்தவை, நித்யபாராயணஞ்செய்து வரும் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் தந்த சில நயமான குறிப்புக்களும், ஊக்கவுரையுமே என்பது உறுதி. ஆதலால் தெய்வத்தமிழ் நூல்களை ஒவ்வொரு தமிழ்மக்கள் கரத்திலும் விளங்கச்செய்ய வேண்டும் என்ற பெருநோக்குடைய ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்களுக்கு அடியேன் "ஆளாய் இனியல்லேன் எனலாமே!"

அடியேனுடைய எளிய குறிப்புக்களையும் திருக்கண்ணோக்கிச் சிறப்பித்து நல்லாசி வழங்கியருளிய செந்தமிழ் வளர்க்கும் செம்மல் ஸ்ரீகாசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவடிகட்கும், குடந்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீமத் சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள் திருவடிகட்கும் அடியேன் வணக்கம் உரியதாகுக.