பக்கம் எண் :

 முதல் பதிப்பின் முகவுரை55


உரைக்குறிப்பும் வேண்டும்:

பலருக்கும் பயன்படக்கூடிய நிலையில் பொழிப்புரையும், தேவையான சொற்களுக்குக் குறிப்புரையும், செய்யுள் முடிபும், தொனிப்பொருள் நயப்பொருள்களும் எழுதினால் நலம் என ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் ஆணைதந்தார்கள். அதனைக் கேட்டவுடன் அடியேன் திடுக்கிட்டேன். அருளாளப் பெருமக்களால் இயற்றப்பெற்ற திருமுறைகள் எங்கே! அடியேன் எங்கே! பாடலை அருளியவர் நிலையில் நம் சிந்தையும் உயர்ந்தாலல்லவா உண்மை யுரை காண இயலும்; அரசவேடந்தாங்கியவன் அரசபாவனையில் நிலைத்து நின்றால் அல்லவா பிறர்மனங்கவர நடிக்க இயலும்? என்ற எண்ணங்கள் அடியேன் மனத்துப் படிப்படியாக எழுந்தன. அப்போது நாடகம் பார்க்க வந்த பலருடைய பாவனை நடிப்பவனிடம் சென்றுதைக்க அவனும் உண்மையரசனாகி உள்ளங்களிக்க நடிக்கவில்லையா? என்ற சிந்தனை பிறந்தது. சிந்தனை "இரும்பிரத குளிகையினால" என்ற சித்தியார் திருவிருத்தத்தை நினைவிற்குக் கொண்டு வந்தது. இருபத்தைந்தாவது குருஞானசம்பந்த சுவாமிகள் ஆணை இப்பணியில் அடியேனை ஆட்கொள்ளுகின்றது; அவர்களுடைய பாவனையால் இதற்கேற்ற அருட்பதிவு எளியேனிடமும் உண்டாகும் என்ற உறுதி பிறந்தது. அதனை நிறைவேற்றிக்கொள்ளக் காழிப்பிள்ளை கழலடியையும் பணிந்தேன். அத்தலத்திலேயே "தோடுடைய செவியன்" என்ற முதற்பாடலுக்கு உரை எழுதத் தொடங்கினேன்.

உரையமைதி:

சைவத்திற்குத் தேவாரத் திருமுறைகள்போல வைணவத்திற்குரிய மனம் உருக்கும் நூல்கள் திவ்யப்பிரபந்தங்கள். அவற்றிற்குப் பெரியவாச்சான்பிள்ளை போன்ற வியாக்யானக்காரர்கள் எவ்வளவு முயன்று எத்துணைச் சுவைபட்ட பேருரையைத் தோற்றுவித்திருக்கிறார்கள். எத்தனையோ இடங்களில் திருப்பாடற்போக்கு, அமைதி, சொல்லாட்சி, சொற்றொடர் ஆட்சி, பொருளாட்சி முதலியன அப்படி அப்படி அமைந்திருக்கின்றனவே. அவற்றையும் ஒத்துநோக்கி எழுதினால் ஏற்புடையதாகுமே என்ற எண்ணம் எழுந்தது. அருளால் அங்ஙனமே இது அமைவதாயிற்று.

பிற சிறப்புக்கள்:

ஒவ்வொரு பதிகத்தின் தொடக்கத்திலும், தெய்வச்சேக்கிழார் பெருமான் தெரிவித்த நெறியில் பதிகம் எழுந்த வரலாற்றுமுறை