தலமுறை:
நமது நாட்டில் சிவபூஜை
செய்பவர்கள் தமது ஆன்மார்த்த மூர்த்தியோடு ஒவ்வொருநாளும்
ஒவ்வொரு தலத்து மூர்த்தியையும் க்ஷணிகாதிலிங்கங்களில்
ஆவாகனஞ்செய்து உடன்வைத்துப் பூசிப்பதும், அந்தந்தத் தலத்துப்
பதிகத்தை அன்று பாராயணஞ் செய்வதும் பழக்கம்.
அதற்குத் தலமுறை மிக்க வசதியளிப்பதாகும்.
பண்முறை:
பண் என்பது பாடலின்
ஒலி.
‘பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்’ என்பது
பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே
பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர்
அமைப்புக்கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச்
சீர் முதலிய யாப்பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த
பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண்
முறையமைப்பை ஒட்டியே இப்பதிப்பு வெளிவருகிறது.
பதிப்புக்கள்:
திருமுறையை முதன்முதல் பல ஏடுகளைத் தொகுத்தாராய்ந்து
வெளிப்படுத்திய பெருமை, திருஞானசம்பந்தம்
பிள்ளையென்னும் தீட்சாநாமம் பெற்ற மதுரை இராமசாமிப்
பிள்ளையவர்களுடையது. இடையிலே செந்தில்வேல்
முதலியார் போன்ற அறிஞர் பலர் இத்துறையில் முயன்று
திருத்தமாய்ப் பதிப்பித்தனர். அண்மையில்
யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை வித்வசிரோமணி
சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பலநாட்டு ஏடுகளைத் தொகுத்து
ஒப்புநோக்கிச் சிறந்த பாடம் காணப் பெரிதும் முயன்று,
பாடபேதக் குறிப்புக்கள் பலவற்றுடன் வெளியிட்டார்கள்.
பின்னர், கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார்
அவர்கள் திருத்தங்களுடன் கழகப்பதிப்பு வெளிவந்தது.
இன்னும் பல பதிப்புக்கள் எத்தனை வந்தாலும் இன்னும்
சிறந்த பாடம் காண வழியுண்டு என்று எண்ணத் தக்க
வகையில் ஏடுகள் கிடைத்து வருகின்றன. அங்ஙனம்
கிடைக்க, சில பாடல்களுக்குத் திருத்தமான பாடங்கள்
இப்பதிப்பிலும் வாய்ந்தன. இவற்றையெல்லாம்
சேர்த்து நல்லதொரு பதிப்பாக - அழகான பதிப்பாக
ஆதீனச் சார்பாக வெளியிடவேண்டும் என்பது எங்கள்
ஸ்ரீலஸ்ரீமகா சந்நிதானமவர்கள் திருவுள்ளக்குறிப்பு.
பதிப்பழகு படிப்பவர்களின் மனத்தை மிகப் பிணிக்குமல்லவா?
|