ஞானிகள் காட்டிய நன்னெறி:
எல்லாரும் இருவினையொப்பு
எளிதில் எய்துதற்குத் தோத்திர பாராயணத்தைக் கைக்கொள்ளலாம்
என்றனர்.
தோத்திரங்கள் ஆன்மாக்களாகிய நமக்கு இறைவன் செய்த
பரமோபகாரங்களைப் பலகாலும் சொல்லி,
கருத்து ஊன்றச் செய்து மனத்தைக் கனியவைக்குங்கருவிகள்.
மனித மனத்தைத் தெய்வமனமாக்கும் மருந்து;
கவலை மனத்தைக் களிப்புமனமாக்கும் குளிகை.
தோத்திரங்களில்
சிறந்தன எவை?
ஏதோ ஒவ்வொருகால்
ஒன்றிய மனத்தோடு
ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும்,
உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால்
அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு
வளர்ந்து, சென்ற சென்ற இடமெல்லாம் திருவருளைக்கண்டு,
அது உள்நின்று உணர்ந்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே
மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால்,
"எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச்
சிறந்தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே.
அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன
முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள்
திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை.
திருஞானசம்பந்தப்பெருமான்
அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து
விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம்
கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான
இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம்
முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திருவருட்பராசத்தி
சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி ‘உண் அடிசில்’ என ஊட்ட, உண்டவாய்
புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த
பெருமையையுடையது ‘தோடு’ என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள
முதல் திருமுறை.
பொதுவாகத் திருமுறைப்
பாகுபாட்டில் பண்முறையெனவும்
தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது
பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது.
தலமுறையாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக்
கோக்கப் பெற்றது.
|