பக்கம் எண் :

52முதல் பதிப்பின் முகவுரை(முதல் திருமுறை)



குருபாதம்

முதல் பதிப்பின் முகவுரை

கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்சில்இன்பஞ்
செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரள
நவிக்கட் சிறுமியர் முற்றில் முகந்துதஞ் சிற்றில்தொறுங்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.

- நம்பியாண்டார்நம்பி.

உற்ற துணை:

உலகம் இன்பதுன்பங்களுக்கும், ஒளியிருள்களுக்கும், புண்ணியபாவங்களுக்கும், அறிவு அறியாமைகளுக்கும் இருப்பிடம். இத்தகைய கலப்பான வாழ்வில் மக்கள் களிப்படைவதில்லை. தனித்த இன்பத்தை - ஒளியை - புண்ணியத்தை - அறிவை அவாவுகின்றனர். ஆனால் துன்பம் இன்றிஇன்பமும், இருளின்றி ஒளியும், பாவமின்றிப் புண்ணியமும், அறியாமையின்றி அறிவும் சிறப்பதில்லை: சிந்தனைக்குப் புலப்படுவதும் இல்லை: அநுபவத்திற்குப் புலனாவதும் இல்லை. ஆதலால் இரண்டுங்கலந்த வாழ்விலேயே உயர்ந்தது சிறக்கின்றது.

ஏன் இரண்டுங்கலந்த வாழ்வு:

இறைவன் பரம கருணாநிதி. மக்களனைவரும் ‘என்றும் இன்பத்து இருக்கவேண்டும்’ என்பதே அவர் திருவுள்ளம். அங்ஙனம் இருந்தும் இன்பமயமாக உலகைப் படைக்காமல் கலந்த வாழ்வினதாய்ப் படைத்ததில் ஆழ்ந்த கருத்து இருத்தல் வேண்டும். அப்பரடிகள் நீற்றறையை நீரோடையாக அநுபவித்தது போல, பொன்னையும் போகத்தையும் பொய்மாயப் பேய்களாகக் கண்டதுபோல, இன்பத்தையும் துன்பத்தையும் சமபுத்திபண்ணுந் தகுதி வரச்செய்யவேண்டும் என்பதே அக்கருத்து. இத்தகுதி எம்மனோர்க்கு எளிதிற் கைவருவதன்று.