முதல் பதிப்பின் மதிப்புரை
ஸ்ரீ சந்திர மௌளீஸ்வராய
நம:
குடந்தை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீமத் சங்கராசாரிய சுவாமிகள்
அவர்கள்
திருமுறைகளில் ஓரடியாவது
தன்நாவினால் நவிலாத தமிழன் தமிழுலகில் இரான். அவைகளின்
பொருளை அறிய வேண்டும் என்னும் அவா ஒவ்வொருவன் உள்ளத்திலும்
எழுவது இயற்கை. பக்குவமடைந்த பெரியோர்களோ,
திருமுறைகள் எல்லாவற்றிற்கும் பொருள் ஏகமாய்ப்
பொதுநடம்புரிகின்ற பெம்மானே எனத் தெளிந்து,
எல்லா அவாக்களுமடங்கிய ஆனந்த நிலையில் நிற்பர்.
சொற்களுடையவும் வரிகளுடையவும் சிறப்புப்
பொருள்களை அறிதற்கான அபக்குவிகளின் ஆவலைத் தணிவிக்க
இதுகாறும் ஒருங்கே நூல் முகமாய் உதவி கிட்டிலது.
நிகண்டுகளையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு
அருள்வாக்குகளுக்குப் பொருளறிய முனையுங்கால்,
அவற்றின் உண்மைப் பொருள்களினின்று பிறழும் நிலை
நேரிடக் கூடும் என்னும் சில பெரியோர்களின்
கொள்கை உண்மையே யாயினும் அத்திருமுறைகளை மேனோக்காக
நோக்குங்காலும், அவைகளில் பதிந்துகிடக்கின்ற
சிறப்புப் பொருளாம் மாணிக்கங்களினின்று
வெளிவீசும் ஒளிகளின் கொழுந்தையேனும் மக்கள் கண்குளிரக்
காணும்படிச் செய்தாலன்றிச் சமயக் கல்விமுறை
குன்றிவரும் இக்காலத்துச் சூழ்நிலையில், நமதிளைஞர்களுக்கு
நமது அரியபெரிய அருள்வாக்குகளைச் சுவைக்கும் பேறே
எட்டாததாகிய விடுமோ என்ற அச்சத்தை அகற்ற,
இக்காலை, பதிக வரலாறுகளுடனும்,
அரும்பதவுரையுடனும், பொதுக்கருத்துரையுடனும்,
கல்வெட்டுக்களின் விவரங்களடங்கிய தலங்களின்
குறிப்புக்களுடனும் திருமுறைப் பதிகங்களின் ஒற்றுமைக்கருத்துக்கொண்ட
புராண தலமான்மிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும்,
தருமை ஆதீனத்தினின்றும் வெளிவரும் திருமுறைப் பதிப்பை
மனமார வாழ்த்துகின்றோம்.
|