முதல் திருமுறையின்
உரைத்திறம்
செந்தமிழ்க் கலாநிதி
பண்டித வித்துவான் திரு.
தி. வே. கோபாலய்யர்
பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம்,
புதுச்சேரி.
சைவத் திருமுறைகள்
பன்னிரண்டனுள்,
திருத்தொண்டர் புராணத்திற்குப் பொழிப்புரை சென்ற
நூற்றாண்டின் இறுதியில் தவத்திரு ஆறுமுகத்தம்பிரான்
அவர்களால் வரையப்பெற்றது. ஏழாம் திருமுறையாகிய
சுந்தரர் தேவாரத்திற்கு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
இராமாநந்தயோகி அவர்களால் பதவுரை வரையப்பெற்றது.
அடுத்துத் திருவாசகத்துக்குச் சிற்றுரையும்
பேருரையுமாகப் பல உரைகள் வரையப்பெற்றன. திருக்கோவையாருக்கு
கி. பி. 1 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பேராசிரியர்
உரையோடு வேற்றவர் வரைந்த உரையும் தமிழகத்தில்
நிலவுகின்றன. ஆனால் முதல் ஆறு திருமுறைகளுக்கும்
இதற்குமுன்னர் உரை வரையப்பெற்றதாக அறியக்கூடவில்லை.
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஏகபாதம்,
எழுகூற்றிருக்கை, மாலைமாற்று, திரு இயமகம்
என்பனவற்றிற்குப் பழைய உரை உளது. துண்டீர மண்டலே
காஞ்சி மஹாக்ஷேத்ர ஞானப்ரகாச தேசிக நாமதேஹஸ்யஸ்வதஸ்லிகிதம்
என்று படியெடுத்தவர் பெயருடன் அவ்வுரை புதுவை பிரஞ்சு
இந்தியக் கலை நிறுவனத்தில் உள்ளது. அச்சுவடி
250 ஆண்டுகளுக்கு முந்தையது. அப்பழைய உரையை இயற்றிய
பெருமகனார் யாவர் என்பது உறுதியாக அறியக்கூடவில்லை.
இந்த நூற்றாண்டின்
இடைப்பகுதியில் ஏழுதிருமுறைகளாக அமைந்த தேவாரத்திற்குக்
குறிப்புரை வரைந்து பதிப்பித்த பெருமை திருத்தருமை
ஆதீனத்தையே சாரும். முதல் திருமுறைக்குக்
குறிப்புரை வரைந்த பெருமகனார் மகாவித்துவான்.
ச. தண்டபாணிதேசிகராவார். ஆழ்வார்களின்
அருளிச்செயல்களுக்கு உரைவரைந்த பெரியவாச்சான்
பிள்ளையின் உரை நயத்தில் தோய்ந்து அதனை ஒப்பக்
காலத்துக்கு ஏற்றவகையில் தேவாரத்துக்கு நயமாக
உரைவரைதல் வேண்டும் என்ற உள்ளத்தோடு அவர் இம்முதல்
திருமுறைக்கு உரை கண்டுள்ளார்.
|