பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்59


இவ்வுரையில் பதிகம் தோன்றிய வரலாறு, பதிகத்தில் சொல்லப்பட்டவற்றைத் தேவைப்பட்ட இடங்களில் சுருக்கிவரைதல், சில பதிகங்களின் ஒவ்வொரு பாடலுக்கும் கருத்தினைச் சுருக்கமாக உரைத்தல், ஒரே தொடருக்கு இரண்டு முதலிய பொருள் கூறல், சொற்றொடர்களுக்கு நயமான உரைகூறல், இயற்கை வருணனையில் சுட்டு என்ற உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்துதல், அருஞ்சொற்பொருள், சொற்றொடர்ப் பொருள்களை எடுத்துரைத்தல், சித்தாந்தக் கருத்துக்களை ஆண்டாண்டு விளக்கிக்கூறல், தல புராணம் முதலிய புராண வரலாறு சுட்டுதல், இன்றியமையாத இலக்கணக் குறிப்புவரைதல், பண்டை நூல்களை மேற்கோள் காட்டல், ஒரோவழி வடமொழிநூல் மேற்கோள் காட்டல், சொற்களின் முடிபு கூறல் முதலிய பலசெய்திகள் உளங்கொளத்தக்கன. ஒவ்வொன்றனையும் எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு சுருங்கக்காண்போம்.

1. பதிகம் தோன்றிய வரலாறு:

ஒவ்வொரு பதிகமும் தொடங்கப்படும் முன்பு அப்பதிகம் தோன்றிய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தை ஒட்டியும், பதிகப் பாடல்களை உட்கொண்டும் குறிப்பிடுகிறார்.

அ) 4- திருப்புகலியும் திருவீழிமிழலையும்.

இப்பதிகத்தில் திருவீழிமிழலையில் இருந்த ஞானசம்பந்தப் பெருமானுக்கு, சீகாழிப் பெருமான் காட்சி வழங்க, ‘எறிமழுவோடு இளமான் கையின்றி’ அப்பெருமான் வழங்கிய காட்சியை ஞானசம்பந்தப் பெருமான் அப்பதிகத்தின் ஒன்பதாம் பாடலில் குறிப்பிடும் செய்தியை இவ்வுரையாசிரியர் எடுத்து இயம்புகிறார்.

ஆ) 6-திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்.

திருமருகலிலிருந்த ஞானசம்பந்தப் பெருமான் பிறதலங்களையும் சென்று வழிபட வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்போடு மருகற்பெருமான் திருவடிகளை வணங்கியபோது அப்பெருமான் திருச்செங்காட்டங்குடி கணபதீச்சரத்திலுள்ள திருஓலக்கத்தைக் காட்டியருள இப்பதிகம் பாடினார் என்று குறிப்பிடுகிறார்.

இ) 13- திருவியலூர்

திருமங்கலக்குடியை வணங்கிப் போந்த பிள்ளையார் திருவியலூருக்கு எழுந்தருளி வியலூர்ப்பெருமானை வணங்க