482. கேடும்பிறவியு மாக்கினாருங்
கேடிலா
வீடுமாநெறி விளம்பினாரெம்
விகிர்தனார்
காடுஞ்சுடலையுங் கைக்கொண்டெல்லிக்
கணப்பேயோ
டாடும்பழையனூ ராலங்காட்டெம்
அடிகளே. 2
__________________________________________________
மறைந்து நின்று. முனைநட்பாய் - முன்னமே
இருந்த நட்பினை உடையவளைப்போலாகி, ஒருத்தி யென்றது
நீலியை. நவஞானியென்னும் பார்ப்பனியை அவள்
கணவன் கொன்றான். அவள் அவனைப் பழிவாங்க எண்ணி
மறுபிறவியில் புரிசைகிழார் என்றும்
வேளாளர்க்குப் புத்திரியாகப் பிறந்திருந்தாள்.
தோற்றத்தைக் கண்டு அவளைப் பேயென்று ஊரார்
புறக்கணித்தனர், முற்பிறப்பின் கணவனாகிய
பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான்.
அவனைக் கண்டதும் இவள் அவன் மனைவிபோல நடித்துப்
பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடி அவ்வூர்
வேளாளர் எழுபதுபேரிடம் அடைக்கலம் புகுந்தான்.
அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியை
வஞ்சித்துக் கொன்றாள். பிணைகொடுத்த வண்ணம்
எழுபது வேளாளரும் தீப்புகுந்து உயிர்துறந்தனர்.
இதனைக் கேட்ட அயலார் அனைவரும் அஞ்சினர் என்ற தொண்டைமண்டல
வரலாறு பின்னிரண்டடிகளிற் குறிக்கப் பெற்றுள்ளது.
2. பொ-ரை: பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத்
தந்தருளியவரும், அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய
நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின்
வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், இடுபாடு சுடலை
ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு
நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு
எம் அடிகள் ஆவார்.
கு-ரை: தோற்ற நரகங்களைத்தந்த
இவரே வீட்டு நெறியையும் விளம்பினார் என்கின்றது.
கேடு - அழிவு. கேடிலா - என்றும் அழிதலில்லாத. அந்நெறியை
யுணர்த்துதலே இறைவனருளிச் செயல்; நெறிக்கண் சென்று
வீடடைதல் ஆன்மாவின் கடன் என்பது காட்டியவாறு. எல்லி
- இரவு. கணப்பேய் - கூட்டமாகிய பேய்.
|