பக்கம் எண் :

606திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


483. கந்தங்கமழ்கொன்றைக் கண்ணிசூடிக்

கனலாடி

வெந்தபொடிநீற்றை விளங்கப்பூசும்

விகிர்தனார்

கொந்தண்பொழிற்சோலை யரவிற்றோன்றிக்

கோடல்பூத்

தந்தண்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 3

484. பாலமதிசென்னி படரச்சூடி

பழியோராக்

காலனுயிர்செற்ற காலனாய

கருத்தனார்

கோலம்பொழிற்சோலைப் பெடையோடாடி

மடமஞ்ஞை

ஆலும்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 4

__________________________________________________

3. பொ-ரை: மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக் கணலிடை நின்று ஆடி சுடுகாட்டில் ‘வெந்த சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: கொன்றையணிந்து, கனலாடி நீறுபூசும் நிமலர் இவர் என்கிறது. கண்ணி - திருமுடியிற் சூடப்பெறும் மாலை. கொந்து அண்கொத்துக்கள் நெருங்கிய. பொழில் - இயற்கையே வளர்ந்த காடு சோலை - வைத்து வளர்க்கப்பெற்ற பூங்கா. கோடல் - செங்காந்தள் கோடல் அரவில் தோன்றிப் பூத்து எனக்கூட்டுக. செங்காந்தள் பூத்திருப்பது பாம்பு படம் எடுத்ததை ஒக்குமாதலின் இவ்வாறு கூறினார்.

4. பொ-ரை: இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி, தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இள மயில்கள்