பக்கம் எண் :

66முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


ஆ) 76. ஆம்பதிகம் - முதற்பாடல்.

மயிலும் மானும் துணையொடும் பெடையொடும் வதிய, நீர்மட்டும் தனித்திருந்து, காதலித்த அடியாளையும் தனித்திருக்கச் செய்து அழகினைக் கவர்வது அழகா என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடையறாமல் இருத்தலாகிய அத்துவித பாவனையில் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்து உண்டாகிய சிவானந்தாநுபவத்தால் உண்டான ஒளிகுறைய, அதனை எண்ணி, ஆன்ம நாயகியை வந்து ஏற்றுக்கொண்ட தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா? என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருள் இதன் உள்ளுறை. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்களுக்கும் கொள்க.

84-2. அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்... நாகைக்காரோணத்தானே. திருமாலின் தருக்கு ஒழித்த தலம் மூன்றினையும் சேர்த்துக் கூறியவாறு. திருவாரூரில் வில் நாணைச் செல்லாக அரித்து நிமிர்த்தித் திருமால் சிரத்தை இடறினார். திருவண்ணாமலையில் தீ மலையாய் நின்று செருக்கு அடக்கினார். நாகையிலும் தியாகேசர் திருவுருவில் இருந்து திருமாலின் தியான வஸ்துவானார் என்பது உட்பொருள்.

97-2. செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்

புன்னை மரங்கள் மகரந்தங்களாகிய செம்பொன்னைக் கொடுக்கும் புறவம் - மரங்களும் வள்ளன்மை செய்யும் நகரம் என அவ்வூர் மக்களின் வள்ளன்மையைச் சுட்டியவாறு.

100-4. கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர் பூஞ்சாரல் வண்டு அறைசோலைப் பரங்குன்றம். மாதொரு பாகனாகிய எம்பெருமான் போகியாதற்கு ஏற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணம் தரும்பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலம்மிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப்பெற்றன.

105-2. வண்டும் சுரும்பும் இசைமுரல ஆலையின் வெண்புகைமுகில் தோயும் ஆரூர். ஆரூர்ப் பெருமானுடைய பாதம்பணிவார் மங்கள வாத்தியம் ஒலிக்க இன்ப உலகு அடைவர் இது உறுதி என்பது உள்ளுறை.