பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்65


கொடுங்குன்றச் சாரலை அடையின் தம்முள் மாறுபட்ட ஆணவக்களிறும் ஐம்பொறிகளாகிய அரிகளும் தம்வலிமை அற்றுக கருணை அருவியின் வழியே இழுக்கப் பெற்று அமிழ்த்தப் பெறும் என்பது உள்ளுறை.

பாடல் 5; மேகத்து இடிக்குரலை வெருவிக் கூகைக்குலம் ஓடித்திரிசாரல். அஞ்ஞானமாகிய வாழ்க்கையை உடைய ஆன்மாக்கள் கருணை மழைபொழியும் இறைவனது மறக்கருணை காட்டும் மொழியைக்கேட்டு மலையை அணுக முடியாதே அலைவர் என்பது உள்ளுறை.

25-4. மழுவாள் ஏந்தி மாதொர் பாகமாய்... ...மேவிய இறைவன். தொழுவார்க்கு துயரம் இல்லாமை ஏது ஒன்று பகையும் பிணியும் தவிர்த்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டையும் அடியவர் பெற இறைவன் மழுவாள் ஏந்திப் பகையும் பிணியும் தடுத்தும் மாதொர் பாகமாய்த் தான் இருந்து இன்பம் பெருக்கியும் காக்கின்றான் என்பது உள்ளுறை

48-2. ஆறடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே? பெண் ஒரு பாதியராக இருந்தும், மற்றொரு பெண்ணாகிய கங்கையையும், காமத்தால் சாபமுற்றுக் கலைகுறைந்த மதியையும் போகியாகிய பாம்பையும் அணிதல் தகுமா? என்று உள்ளுறுத்து வினவியது.

66-1. கடல்வாழ் சங்கம் பரதர் மனைக்கேறி முத்தம் ஈனும் சண்பைநகர். பிறவிக்கடலில் ஆழ்வாரும் வினைநீங்கும் காலம் வரின் சண்பை நகர் சார்ந்து பேரின்பம் எய்துவர் என்பது உள்ளுறை.

71-2. காதலியும் தாமும் விடையேறி...செங்கால் அன்னமும் பெடையும் சேரும் சித்தீச் சரத்தாரே, இறைவன் தன் காதலியும் தானும் விடையேறியிருப்பதால் பொய்கைகளில் அன்னமும் பெடையோடு சேர்ந்து இருக்கின்றன எனப்போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை நல்கும் தன்மையைச் சுட்டியவாறு.

73-4. யான் அறியாமையால் எண்ணாதிருக்கச் செய்தேயும் வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்து மிக்க துன்பத்தைச் செய்தான் என்றது ஆன்மாக்கள் தலைவனை தாமே சென்று அடைதற்கும் கலத்தற்கும் பிரிதற்கும் என்றும் சுதந்திரம் இல்லாதன என்று அறிவித்தவாறு.