635. பிணிநீர சாதல் பிறத்தலிவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலக மெய்தலுறில்
அறிமின் குறைவில்லை யானேறுடை
மணிநீல கண்ட முடையபிரான்
மலைமக ளுந்தானு மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத்
தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 2
__________________________________________________
கு-ரை: தவம் செய்யும் இடத்தைத்
தேடுகின்ற மக்களே! தூங்கானைமாடம் தொழுமின்கள்
என்கின்றது. நின்றீர் எல்லாம் ஆளாம்வண்ணம்
தொழுமின்கள் எனக்கூட்டுக.
ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம்
வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கியிருக்கும்
நோய். அடங்கும் இடம் - அடங்கியிருத்தற்குரிய
இடம். கிடங்கு. - அகழ். சுலாவி - சுற்றி. கெழுமனைகள்
- கூடிய வீடுகள்.
கடந்தை - பெண்ணாகடம். இது தலப்பெயர்.
தூங்கானை மாடம் என்பது கோயிலின் பெயர்.
2. பொ-ரை: பிணிகளின் தன்மையினை
உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க,
எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய
அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய
விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும்,
கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற
கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான்
மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும். தெளிந்த
நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய
திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து
தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.
கு-ரை: பிறப்பிறப்பு நீங்கிப்
பேரின்பம் உற எண்ணில் இக்கோயிலைத்
தொழுங்கள் என்கின்றது.
பிணிநீர் - நோய்த் தன்மையையுடைய.
அணிநீர - அழகிய மணிநீல கண்டம் - அழகிய
நீலகண்டத்தையுடைய. பிரான் - வள்ளன்மையுடையவன்.
துணிநீர் - தெளிந்த நீர்.
|