பக்கம் எண் :

722திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


655. போர்மிகுத்த வயற்றோணி

புரத்துறையும் புரிசடையெங்

கார்மிகுத்த கறைக்கண்டத்

திறையவனை வண்கமலத்

தார்மிகுத்த வரைமார்பன்

சம்பந்த னுரைசெய்த

சீர்மிகுந்த தமிழ்வல்லார்

சிவலோகஞ் சேர்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

_______________________________________________

என் செவி குளிரப் பேசுவாயாக.

கு-ரை: இங்ஙனம் சேய்மையிலும் அண்மையிலும் இருக்கின்ற பொருள்களை வேண்டிக்கொள்ள, அவை பயன்படாதொழியவே, தான்வளர்த்த கிளியையைநோக்கி, ‘ஒருகால் அவர் பெயரைச் சொல்’ என்று வேண்டுகின்றாள். இதுவரை தூதுவேண்டிய அவள் இப்போது கிளியிடம் பெயரை வேண்டுவது. கிளி சென்று தூதுரைத்துத் தலைவரை உடன்படுத்தி அழைத்துவரும் வரையில் பிரிவுத்துன்பம் பொறுக்கமுடியாத அளவு பெரிதாம் என்பதை எண்ணி, தலைவனுடைய பெயரைக் கேட்கின்ற அளவிலாவது துன்பந் தோன்றாது என்ற குறிப்பினளாக இங்ஙனம் வேண்டுகின்றாள். அங்ஙனம் சொல்வதற்குக் கைக்கூலியும் தருவதாக தேனொடுபால் முறையாக உண்ணத் தருவேண் என்கின்றாள்.

11. பொ-ரை. தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலைபோன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினைய வல்லவர் சிவலோகம் சேர்வர்.

கு-ரை: கழுமலநாதனைப்பற்றிச் சம்பந்தர் அருளசெய்த சிறப்பமைந்த இத்தமிழ்வல்லவர்கள் சிவலோகம் சார்வர் எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது. போர் - வைக்கோற்போர். கார் - கருமை. கமலத்தார் மிகுத்த வரை மார்பன் - தாமரை மலர் மாலை.