61, திருச்செங்காட்டங்குடி
பதிக வரலாறு:
நாகை, கீழ்வேளூர் முதலிய தலங்களை
வணங்கிக் கொண்டு பெருகிய ஞானம் பெற்ற
பிள்ளையார் எழுந்தருளுகின்றபோது,
இச்செய்தியைச் செவுயுற்ற சிறுத்தொண்டர் ஓடிப்
போய் அழைத்துவந்து திருச்செங்காட்டங்குடியைச்
சேர்ப்பித்தார். சிறுத்தொண்டரோடு
நட்புக்கொண்டு அங்க எழுந்தருளியிருக்கின்ற
காலத்துக் கணபதீச்சரம் வழிபடச்சென்றார்.
கோயிலை வலங்கொண்டார். அரவணிந்தார்
அடிக்கீழ் வீழ்ந்து எழுந்து திருமுன் கைகூப்பி
நின்று, சிறுத்தொண்டர் தொழ இருந்த பெருமையைச்
சிறப்பித்து ‘நறை கொண்ட மலர் தூவி‘ என்னும்
பொங்கியெழும் இசைப்பதிகமாகிய இதனைப்
பாடினார்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண் : 61
திருச்சிற்றம்பலம்
656. நறைகொண்ட மலர்தூவி
விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார்
முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ்
செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
கணபதீச் சரத்தானே . 1
__________________________________________
1. பொ-ரை: அடியவர்கள்
நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய
நாண்மலர்களைத் தூவி மணம் கமழச் செய்வித்துத்
தவறாமல் நின்று பணி செய்து வழிபட, விடக்கறை
பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் கோயில் சிறகுகளை உடைய
வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங்
குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.
கு-ரை: அடியார் மணந்தரும் பூக்களைத்
தூவி வழிபட இறைவன் கணபதீச்சரத்தில்
எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது. நறை -
தேன்.
|