பக்கம் எண் :

760திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


65. காவிரிப்பூம்பட்டினத்துத்

திருப்பல்லவனீச்சரம்

பதிக வரலாறு:

திருவலம்புரத்தை வணங்கித் திருச்சாய்க்காடு செல்லத் திருவுளம்பற்றிய பிள்ளையார், வழியில் பல்லவனீச்சரத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள பன்னகப் பூணினாரைப் பணிந்து போற்றி ‘அடையார்தம் புரங்கள் மூன்றும்‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.

பண்: தக்கேசி

பதிக எண்: 65

திருச்சிற்றம்பலம்

701. அடையார்தம் புரங்கண்மூன்று

மாரழலில் லழுந்த

விடையார்மேனி யராய்ச்சீறும்

வித்தகர் மேயவிடங்

கடையார்மாட நீடியெங்கும்

கங்குல் புறந்தடவப்

படையார்புரிசைப் பட்டினஞ்சேர்

பல்லவ னீச்சரமே. 1

__________________________________________________

1. பொ-ரை: பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வானவெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

கு-ரை: திரிபுரங்கள் தீயிலழுந்தச் சீறும் வித்தகர் இடம் பல்லவனீச்சரம் என்கின்றது. அடையார் - பகைவர். விடையார் மேனியர் - இடபத்தில் ஆரோகணித்த திருமேனியார். கங்குல் - ஆகாயம். படை - ஆயுதம் பல அடுக்கு.