723. கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையு
முடையார் காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப்
பொன்றப் புறந்தாளால்
எண்ணாதுதைத்த வெந்தைபெருமா
னிமவான் மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப்
பழன நகராரே. 2
724. பிறையும்புனலுஞ் சடைமேலுடையார்
பறைபோல் விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையா
ருலகர் தலைமகன்
அறையுமலர்கொண் டடியார்பரவி
யாடல் பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப்
பழன நகராரே. 3
__________________________________________________
2. பொ-ரை: மது உண்ட வண்டுகள் பண்பாடி
ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழன
நகரில் இமவான் மகளாகிய பார்வதி தேவியோடு எழுந்தருளிய
இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில்
ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர்.
காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய
புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை
ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த
எந்தை பெருமானார் ஆவார்.
கு-ரை: காலனை இரத்த ஆறு பெருக்கெடுத்தோடப்
புறந்தாளால் உதைத்த பெருமான் பழனநகரார் என்கின்றது.
இதுவும் ஆபத்சகாயர் என்ற இத்தலத்திறைவனுக்கேற்ற
செயலாதல் அறிக. கண்மேல் கண் - நெற்றிக்கண்.
புண்ணார் உதிரம் - புண்ணை வழியாகக்கொண்டு
வெளிப்படுகின்ற இரத்தம். பொன்ற - இறக்க. எண்ணாது
- அவனை ஒரு பொருளாக மனத்து எண்ணாது.
3. பொ-ரை: அடியவர்கள் உயர்ந்தனவாகப்
போற்றப்படும் நறுமலர்களைக் கொண்டுவந்து சாத்தி,
பரவி, ஆடல் பாடல்களைச் செய்
|