பக்கம் எண் :

822திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


73. திருக்கானூர்

பதிக வரலாறு:

திருமழபாடியை வணங்கிப் பதிகம்பாடி அங்கு எழுந்திருளிய பிள்ளையார், திருக்கானூரை அடைந்தார்கள். ‘வானார் சோதி‘ என்னும் இந்த வளமார் பதிகத்தைப்பாடி, வணங்கினார்கள்.

பண்: தக்கேசி

பதிக எண் : 73

திருச்சிற்றம்பலம்

787. வானார்சோதி மன்னுசென்னி

வன்னி புனங்கொன்றைத்

தேனார்போது தானார்கங்கை

திங்க ளொடுசூடி

மானேர்நோக்கி கண்டங்குவப்ப

மாலையாடுவார்

கானூர்மேய கண்ணார்நெற்றி

யானூர் செல்வரே. 1

___________________________________________

1. பொ-ரை: திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றியினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக் காலத்தில் நடனம் புரிபவராவர்.

கு-ரை: கானூர் மேவிய செல்வர், சென்னியிலே வன்னி, கொன்றை, திங்கள், கங்கை சூடி அம்மைகாண ஆடுவார் என்கின்றது.

வானார்சோதி - வானிலுள்ள ஒளிப்பொருளாகிய சூரியனும் சந்திரனும். சென்னி - திருமுடி. வன்னி - வன்னிப் பத்திரம், மானேர் நோக்கி - மானை ஒத்த கண்களையுடைய பார்வதி. ஆன் ஊர் செல்வர் - இடபத்தை ஊர்ந்த செல்வர்.