75. திருவெங்குரு
பண்: குறிஞ்சி
பதிக எண் : 75
திருச்சிற்றம்பலம்
809. காலைநன்மாமலர் கொண்டடிபரவிக்
கைதெழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள
வுதைத்தவனுமையவள்
விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி
மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 1
____________________________________________________
1. பொ-ரை: வைகறைப் பொழுதில்,
சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து
சாத்தின் தன் திருவடிகளைப் பரவி, கைகளால்
தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச்சினந்து
வந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே
உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு
விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக்
காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்த உலவிச்
சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை
உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள்
சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி
வீற்றிருந்தருள்கின்றான்.
கு-ரை: நாள்தோறும் மலர்கொண்டு
அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த
பரமன் வெங்குரு என்னும் சீகாழியில்
வீற்றிருக்கிறார் என்கின்றது.
மாணி் - பிரமசாரியாகிய
மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம்
வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும்
பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள்
சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது.
|