பண்: குறிஞ்சி
பதிக எண்: 80
திருச்சிற்றம்பலம்
864. கற்றாங் கெரியோம்பிக் கலியை
வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்
பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1
865. பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்
டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்
பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ்
சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய
றீர்வாரே. 2
____________________________________________________
1. பொ-ரை: வேதம் முதலிய
நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே
நின்று. வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை
வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும்
தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில்
எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச்
சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப்
பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம்
பற்றா.
கு-ரை: இப்பாடல் சிற்றம்பலநாதன்
திருவடியே பற்றுக் கோடாகக் கொண்டவர்களைப்
பாவம் பற்றாது என்கின்றது. கற்று - வேதம்
முதலியவற்றை ஓதி. ஆங்கு எரி யோம்பி -
அந்நெறியிலேயே நின்று வேள்வியைச் செய்து. கலி -
பாவம். பற்றா - பற்றுக்கோடாக.
2. பொ-ரை: பல இடங்களிலும்
வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக்
கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள்
வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில்
எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப்
பிறத்தல் இல்லாதவனும், பின்புறம் தாழ்ந்து
தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை
மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.
கு-ரை: சிற்றம்பலநாதரை
மறவாதவர்களே மலமயக்கம் தீர்வார்கள்
என்கின்றது. பறப்பை - வேள்விச்சாலை. பசு வேட்டு -
ஆன்மபோதத்தைக் கொன்று. எரி ஓம்பும் -
சிவாக்கினியை வளர்க்கும். சிறப்பர் -
சிறப்பினை உடைய தில்லை வாழ் அந்தணர்கள்.
|