பக்கம் எண் :

 80. கோயில்881


80. கோயில்

பதிக வரலாறு:

சீகாழியினின்றும் புகலிவேந்தர், அடியார்களும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் சிவபாத இருதயரும் உடன்வரத் தில்லை செல்லத் திருவுளங்கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் கொள்ளிடத்தைக் கடந்தார்கள். தில்லையின் தெற்குவீதியணுகினார்கள்.

தில்லை வாழந்தணர்கள் சிரபுரப் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைக்க, நகரை அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்ப்புறத்தே வந்து, அழைத்துச் சென்றனர்.

பிள்ளையார் திருவீதியைத் தொழுதனர். எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கினர். திருமுன்றில் திருமாளிகையையும் வலம்வந்து வணங்கிக் கொண்டு உட்புகுந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சிந்தையில் ஆர்வம் பெருகிற்று. கண்கள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தன. செங்கை சிர மீது ஏறிக் குவிந்தது. இவ்வாறு உருகிய அன்பினராய் உட்புகுந்தார்.

இறைவன் தமக்களித்த சிவஞானமேயான திருவம்பலத்தையும், அந்த ஞானத்தால் விளைந்த ஆனந்தமாகிய கூத்தப் பெருமானையும் கண்ணாரக்கண்டு கும்பிட்டார்.

ஆனந்தக் கூத்தருக்கு உரிமையான தனிச் சிறப்பினையுடைய தில்லை வாழந்தணரை முன் வைத்து "கற்றாங் கெரியோம்பி" என்னும் இப்பதிகத்தை ஏழிசையும் ஓங்க எடுத்தார்.

திருக்கடைக்காப்பும் முடித்து, ஊனையும் உயிரையும் உருக்கும் ஒப்பற்ற கூத்தை வெட்ட வெளியிற் கண்டு திளைத்து, சிவானந்தப் பேறமுதுண்ட பிள்ளையார் ஆனந்தமேலீட்டால் அழுதார்.