84. திருநாகைக்காரோணம்
பதிக வரலாறு :
திருச்சாத்தமங்கையில் திருநீலநக்க
நாயனார் திருமாளிகையில் தங்கி வழிபட்டுத் திருப்பதிகம்பாடி
எழுந்தருளியிருந்த பிள்ளையார், பிற பதிகளையும்
வழிபடத் திருவுளம் பற்றி, அடியார் கூட்டங்களோடு நாகப்பட்டினத்தை
யடைந்தார்கள். திருநாகைக் காரோணத்தைக் கைதொழுது
கலந்த ஓசைச் சொற்றமிழ் மாலையாகிய ‘புனையும்
விரி கொன்றை’ என்னும் இப்பதிகத்தைப் பாடிச்
சிலநாள் தங்கியிருந்தார்கள்.
பண் : குறிஞ்சி
பதிக எண்: 84
திருச்சிற்றம்பலம்
904. புனையும் விரிகொன்றைக் கடவுள்
புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண்டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே. 1
____________________________________________________
1. பொ-ரை: விரிந்த கொன்றை மலர்
மாலையைப் புனையும் கடவுளாகிய சிவபிரான், கங்கை
நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல்,
வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு
தலை மாலையைச் சூடி, வினை நீங்கிய அடியவர்கள் விதிப்படி
வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக்
காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: வினைநீங்கிய அடியார்கள் விதிப்படி
வழிபட்டுச் செறியும் கடனாகைக் காரோணத்தானே சிலமாலையணிந்தவன்
என்கின்றது.
புனையும் - அழகுசெய்யும். கடவுள்புனல் - தேவ
கங்கை. வினையில் அடியார்கள் - வினை ஓய்ந்த அடியார்கள்.
கனையும் - செறியும்.
|