பக்கம் எண் :

 84. திருநாகைக்காரோணம்905


905. மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற வண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடனாகைக் காரோ ணத்தானே. 4

908. ஆணும் பெண்ணுமா யடியார்க் கருணல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடனாகைக் காரோ ணத்தானே. 5

____________________________________________________

4. பொ-ரை: பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணி வந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழி பாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: பழியொடு பொருந்தாத பத்தர்தொழும் நாகை என்கின்றது. மொழிசூழ்மறை - மந்திரமொழியாகச் சூழும் வேதம். அழிசூழபுனல் - அழித்தலையெண்ணி மிடுக்கொடு வந்த கங்கை. பழிசூழ்வுஇலராய - பழிசூழாத. பழியும் சூழ்ச்சியும் இலராய என்றுமாம்.

5. பொ-ரை: ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள் புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: அடியார்க்கு அருள்செய்து, விலகி நின்றவருக்கும் திருவுளம் பாலித்துத் தியானிக்கும் செம்மனச் செல்வர் தரிசிக்க நின்றவன் இவன் என்கின்றது. சிவம் சத்தியாக நின்றாலல்லது அருளல் நிகழாமையின் ‘ஆணும் பெண்ணுமாய் அருள் நல்கி‘ என்றார். சேண் நின்றவர் - தூரத்தே நின்றவர்; தேவருமாம். இன்னம் சிந்தைசெய வல்லான் - மேலும் திருவருள் உள்ளத்தைப் புரிய வல்லவன். காணும் - அநவரததரிசனம் செய்யும்.