909. ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடனாகைக் காரோ ணத்தானே. 6
910. அரையா ரழனாக மக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரோ ணத்தானே. 7
____________________________________________________
6. பொ-ரை: பன்றியின் பல், பாம்பு
ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும்
இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய
சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல
அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள்
சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: ஞானிகள் பணிய இருப்பான்
இவன் என்கின்றது. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு.
அரவம் - பாம்பு. ஞானத்து உரைவல்லார் - சிவஞானத்தோடு
செறிந்து இறைவன் புகழையே பேசவல்லவர்கள். கானல்
- கடற்கரைச் சோலை.
7. பொ-ரை: இடையில் அழல்போலும்
கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக்
கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு
அணிந்துள்ள தலைமையாளனாகியசிவபெருமான், மலைகள்
மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும்
கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: சங்குமணியைச் சர்ப்பத்தோடு அணிந்தவன்
இவன் என்கின்றது. அரை ஆர் அழல் நாகம்
- இடுப்பில் பொருந்திய தீயைப்போல் கொடிய விடப்பாம்பு.
அக்கோடு - சங்குமணியோடு. அசைத்திட்டு
- கட்டி. விரை - மணம். வரை ஆர்வன போல - மலைகள் நிறைந்திருப்பனபோல.
வங்கங்கள் - தோணிகள். வங்கங்கள் வரையார்வனபோல
வளரும் கரை எனக் கூட்டுக.
|