பக்கம் எண் :

 85. திருநல்லம்907


911. வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள்
இலங்கைக் கிறைவாட வடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடனாகைக் காரோ ணத்தானே. 8

912. திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் றிரைசூழ்ந்த
கருமால் கடனாகைக் காரோ ணத்தானே. 9

____________________________________________________

8. பொ-ரை: மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: தன் புகழை நம்பி வளர்ந்த தோளையுடைய இராவணன் வாட அடர்த்து, அருள் செய்தவர் இவர் என்கின்றது.

வலங்கொள் புகழ் என்றது கொடை முதலியவற்றாலும் புகழ் வருமாதலின் அவற்றினின்றும் பிரிக்க. கலம் - மரக்கலம்.

9. பொ-ரை: திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறை மதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற் கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி யுள்ளான்.

கு-ரை: அயன் மால் இவர்கள் பெருமானே என ஏத்தநின்றவர், விடையூருஞ்செல்வர், இவர் என்கின்றது.

செரு மால் விடை - சண்டைசெய்யும் பெரிய இடபம். கருமால் கடல் - கரிய பெரிய கடல்.