913. நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார்
புறங்கூற
அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே. 10
914. கரையார் கடனாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
10. பொ-ரை: நல்லவர்கள் அறநெறிகளைப்
போதிக்கவும் பொல்லாதவர்களாகிய சமணர்கள்
புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும்,
தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய
இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை
மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து
ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில்
விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: நல்லவர்கள் அறம் சொல்ல,
தீயோர் புறங்கூற, அயலார் பழிசொல்ல, அடியார்க்கு
அருள்செய்பவன் காரோணத்தான் என்கின்றது. பல்
ஆர் தலை - பல்லோடுகூடிய தலை. கல் ஆர் கடல் - கல்
என்னும் ஒலியோடு கூடிய கடல்.
11. பொ-ரை: இடைவிடாது ஒலி செய்யும் கடலின்
கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில்
எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக்
கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப்
போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப்
பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம்
மிக்க வானுலகை அடைவார்கள்.
கு-ரை: காரோணநாதனை ஞானசம்பந்தன்
சொன்ன தமிழ் மாலையாகிய இவற்றைப் பாடுவார் அழியாவடிவோடு
வான் அடைவார்கள் என்கின்றது. கரையார்கடல் - ஒலிக்கின்ற
கடல். நரை - வெண்மை. உரை - புகழ். கரையா உருவாகி -
அழியாத வடிவத்தோடு. கலி - ஓசை.
|