929. நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழு
தேத்து மடியார்கட் கில்லை யிடர்தானே.
4
930. அகத் துமைகேள்வ னரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
5
____________________________________________________
4. பொ-ரை: உலகியல் நெறி முறைகளைத்
தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை
உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும்,
அந்நெறி நிற்பாரைக் காத்தருள்பவனும் ஆகிய நல்லூர்ப்
பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு
இடரில்லை.
கு-ரை: இவனைக் கைதொழுதேத்துவார்கட்கு
இடர் இல்லை என்கின்றது.
நீத்த நெறியானை - விடுபட்ட நெறிகளையுடையவனை.
நெறி என்பன யாவும் மலமாயாபந்தங்களாற் கட்டப்
பெற்ற எம் போலியர்க்கே ஆதலின், அவையற்ற
இறைவன், விடுபட்ட ஆசார சீலங்களை உடையவனாயினன்.
நாத்த நெறியானை என்பதில் ஞாத்தநெறி நாத்த நெறியாயிற்று.
ஞாத்த - கட்டப்பட்ட; எமக்கு ஒழுங்குகளைக் கட்டிக்
கொடுத்தவனை என்பது பொருள்.
5. பொ-ரை: தனது திருமேனியில், கூறாகக்
கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த
சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக்
கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை
மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள்
இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ
உலகில் வாழ்வார்.
கு-ரை: சிவனைச் சேரவேண்டும் என்ற
தாகம் எடுத்து அணுகுந் தொண்டர்கள் போகம் நிறைந்த
மனத்தராக உலகம் புகழத் திரிவார்கள் என்கின்றது.
ஆகம் - மேனி. தாகம் புகுந்து - வேட்கைமிக்கு. அண்மி
- அணுகி.
|