பக்கம் எண் :

916திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


927. ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே. 2

928. சூடு மிளந்திங்கட் சூடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே. 3

____________________________________________________

2. பொ-ரை: ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.

கு-ரை: அம்மையொடு உடனாயும் வேறாயும் இருக்கும் பெருமானாகிய, நல்லூர் இறைவனைத் தோத்திரிப்பார்க்குக் குற்றம் அடையா என்கின்றது.

ஏறில் எருது ஏறும் விகிர்தர் எனக் கூட்டிப் பொருள்கொள்க. எருதன்றி வேறொன்றிலும் அவர்க்கு விருப்பில்லை என்றவாறு. எழில் - அழகு. வேறாதல் - அம்மையை இடப்பாகத்துக் கொண்டிருத்தல். உடனாதல் - தன்மேனியில் ஒருபங்காய்க் கொண்டு அர்த்த நாரீச்சுரராக இருத்தல். இதுவும் உருவில் வேறுபட்டுத் தோன்றுதலின் சத்தியைத் தன்னுளடக்கியிருக்கும் நிலை கூறிற்றுமாம்.

3. பொ-ரை: இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச் செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.

கு-ரை: ஊரிடு பிச்சையை நாடும் முறையையுடைய நல்லூர்ப் பெருமானைப் பாடுகின்ற அடியவர்களைப் பாவம் அடையா என்கின்றது. சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன் போலும் திருச்சடை.