86. திருநல்லூர்
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பாலைத்
துறையை வணங்கிக்கொண்டு திருநல்லூரை யடைந்தார்கள்.
அங்கிருந்த அந்தணர்கள் மங்கள வாத்தியங்களுடன்
எதிர் கொண்டு அழைத்தனர். பிள்ளையார் சிவிகையில்
ஆரோகணித்த வண்ணமே சென்றார். கோயிலை அணுகியதும்
சிவிகையினின்றும் கீழிறங்கி, அந்தணர் கூட்டம்
முன்செல்ல, அடியார் கூட்டம் இரு மருங்கும் வர, திருக்கோயிலையடைந்தார்.
கோபுரத்தைக்கண்டு வணங்கினார். கோயிலை வலம்
வந்தார். அப்போது ஆனந்த பாஷ்பம்
அருவிபோற்பொழிய இறைவனைத் தொழுது பரவு சொற்பதிகமாகிய
"கொட்டும்பறை" என்னும் இதனை அருளிச் செய்தார்.
பண் : குறிஞ்சி
பதிக எண்: 86
திருச்சிற்றம்பலம்
926. கொட்டும் பறைசீராற் குழும வனலேந்தி
நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை
முட்டின்றிருபோது முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்க ளறியார் பாவமே. 1
___________________________________________________
1. பொ-ரை: பறை கொட்டும் சீருக்கு
ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக் கையின்கண்
அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப்
பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி
எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப்
பாவம் அணுகாது.
கு-ரை: பறை கொட்டுஞ் சீருக்கு ஏற்ப
அனலேந்தியாடும் நல்லூர்ப்பெருமானை, காலை மாலை
யிருவேளைகளிலும் அன்பு செய்யுமனத்தவர்கள் பாவமறியார்
என்கின்றது. சீரால் - சதிக்கு ஏற்ப சீரால் ஆடும்
எனக் கூட்டுக. முட்டின்று - இடையீடு இல்லாமல். அன்புபட்ட
- அன்பொடு பொருந்திய.
|