991. சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
11. பொ-ரை: சிறப்புப்
பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய
உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர்
இன்பத்தினின்று நீங்கார்.
கு-ரை: முத்தியாகுமே
என முதற்பாட்டில் அருளியவர்கள் அதற்கிடையூறானபிறவி
வினை பாசம் இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும்,
நீங்கியார் எய்து பயனையும் முறையே கூறினார்கள்.
இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய
இன்பத்தை எய்துவர்; பேரார்; நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச்
செய்தருள்கின்றார்கள். சீர் ஊர் - சீகாழி. பாரூர்
பாடல் - உலகமுழுதும் பரவிப் பண்படுத்தும் பாடல். இன்பம்
பேரார் - பெற்ற இன்பத்தினின்றும் மீளார். பேராவின்பப்
பெருவாழ்வெய்துவர் என்பதாம். கீழ்ப்பாடல்களும்
ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்துபாடல்களும், தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவார்
எய்தும் பயனை இரண்டு பாடல்களும் பாடற்பயனை
ஒருபாடலும் உணர்த்துகின்றன.
நால்வர் நான்மணி மாலை
மகிழ்ச்சி
மிகவுண்டு போலுமெதிர் வந்து
புகழ்ச்சியோடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச்
சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா
தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.
பயனாகும்
நல்லாண் பனைக்குவிடத் திற்கு
மயிலாகும் நோய்க்கு மருந்தாம் - உயிராகுஞ்
சிந்துமெலும் பிற்குச்
சிரபுரத்து நாவலன்சம்
பந்த னியம்புதிருப் பாட்டு.
-சிவப்பிரகாச சுவாமிகள். |
|