989. துள்ளு மிருவர்க்கும், வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 9
990. கடுக்கொள்சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 10
___________________________________________________
9. பொ-ரை: செருக்குற்றுத்துள்ளிய திருமால்
பிரமரின் செருக்கு அடக்கி அருள் செய்த, ஆரூரில்
எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து
வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.
கு-ரை: அருள்பெற்றுச் சிறிது திருந்திப்
பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் மயங்குவாராயினும்,
அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு
என்று திருவுளங்கொண்டு அருள்செய்யும் கருணையாளன்
எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால்
ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது
இப்பாடல். துள்ளும் இருவர் - அதிகாரம் பெற்ற சகலான்மாக்களாதலின்
மலமுனைப்பால் தாம் பெரியர் எனத்துள்ளுகின்ற பிரம
விஷ்ணுக்கள். வள்ளல் - அவர்களுடைய மிகுதி கண்டும்
நகையாது வழங்குபவர். உள்ளுதல் - தியானித்தல். மேல்
வினை விள்ளும் எனவும் கூட்டலாம்.
10. பொ-ரை: கடுக்காயைத் தின்று துவர்
ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய
ஆரூர் இறைவனே பரம் பொருள் எனச் சிறப்பித்து
வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.
கு-ரை: அதிகாரமலத்தான் துள்ளுவாரையும்
ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய
ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக்
காட்டுகின்றது இச்செய்யுள்.
கடுக்கொள் சீவர் - கடுப்பொடியைக்கொள்ளும்
சமணராகிய ஆன்மாக்கள். அடக்கினார் - அத்தன்மை
கெடுமாறு அடக்கியவர். எடுத்து வாழ்த்துவார் - உள்ளத்துட்கிடந்த
உணர்ச்சி வெள்ளம் உரையிறந்து வருதலின் கேட்டாரும்
தம்போலுய்ய உரக்க வாழ்த்துபவர். வேட்கைவிடுப்பர்
- உரையினைச் செவிகேட்க, கேட்டதனைச் சித்தம் தியானிக்க,
அதனால் மனம் ஒடுங்குதலின் பற்றுள்ளத்தைவிடுவர்
என்பதாம்.
|