987. வெய்ய வினைதீர, ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 7
988. அரக்க னாண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 8
___________________________________________________
பாசமறுத்த நம்பியாரூரர்க்குத் தோழரானது
போல நமக்கும் நேசமாவர் என்ற நினைப்பு உண்டாகும்.
அன்பு முதிரும் என்றுமாம்.
7. பொ-ரை: கொடிய வினைகள் தீர வேண்டுமென
விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய
அனைத் துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான
மலர்களைத் தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.
கு-ரை: இருவகை வினையும் தீரவேண்டும்
என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும்
உணர்த்துகிறது இப்பாடல். வெய்ய வினை - விரும்பத்தக்க
நல்வினையும் கொடிய தீவினையும். இரண்டும் பொன்
விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின்
நல்வினையும் தீரவேண்டுவதாயிற்று. செய்ய மலர் -
சிவந்த மலர். வையம் உமதாம் - எலிமாவலியாகி வையமுழுதாண்டாற்போல
உமதாம் என்பதாம். விளி முதற்பாட்டிலிருந்து
கொள்ளப் பெறும்.
8. பொ-ரை: அரக்கர் தலைவனாகிய இராவணனின்
ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து
அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக.
உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.
கு-ரை: செய்யமலர்தூவி வையந்தமதாய
காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து திருத்தம்
நல்குவர் தியாகேசராதலின் அவர்தலத்தைக் கையினாற்றொழ
வேண்டும் என்கின்றது இப்பாடல்.
அரக்கன் - சிவபூசையை விதிமுறையியற்றி
ஆட்சியும் படையும் பெற்ற இராவணன். ஆண்மை - திருவருட்பதிவு
இன்மையால் தன்முனைப்பால் எழுந்த வன்மை.
நெருக்கினான் - அடர்த்தவன். திருத்தம் -தூய்மை. திருத்தமாகும்
- கோணல் நீங்கும் என்றுமாம். அரக்கன் தருக்கழித்த
இறைவனது ஆரூர் தொழத் திருத்தமாம் என்க.
|