94. திருவாலவாய்
பதிக வரலாறு:
குலச்சிறையார் எதிர்கொள்ள எழுந்தருளிய
திருஞானசம்பந்த சுவாமிகள் "இதுதான் திருவாலவாய்"
என உடன் வரும் அடியார்கள் காட்டக்கண்டு கரங்குவித்தருளிப்
பதிகம் பாடித் திருக்கோயிலை அடைந்தார்கள்.
ஆலவாயண்ணலை ஆராத அன்பினுடன் வழிபட்டுப் புளகம்
மெய்யெலாம் போர்ப்ப, கண்ணீர்வாரத் திருமுன்னின்று
"நீலமாமிடற்றாலவாயினான்" என்னும் மூலமாகிய
திருவிருக்குக்குறளை மொழிந்தார்கள். அடியார்களோடும்
சிவானந்த வாரிதியில் திளைத்தார்கள்.
திருவிருக்குக்குறள்
பண்:குறிஞ்சி
பதிக எண்:94
திருச்சிற்றம்பலம்
1014. நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞால மாளவரே. 1
1015. ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 2
____________________________________________________
1. பொ-ரை: நீலநிறம் பொருந்திய கண்டத்தினை
உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால்
அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை
ஆள்வர்.
கு-ரை: பாலது ஆயினார் - சாமீப்யம்
அடைந்தவர்கள்.
2. பொ-ரை: எமபயம் இன்றி வாழ,
ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய்
இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி
வருவீர்களாக.
கு-ரை: ஞாலம் ஏழுமாம் ஆலவாயில் -
உலகேழும் உளதாதற்குக் காரணமாகிய துவாதசாந்தப்
பெருவெளியாகிய ஆலவாயில். சீலம் - குணங்கள். வீட -
அழிய.
|