பக்கம் எண் :

982திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


99. திருக்குற்றாலம்

பதிக வரலாறு:

சண்பைகாவலர் திருச்சுழியலை வணங்கிப் பின்னர் குற்றாலத்தை அடைந்து குற்றாலநாதர் குரைகழல்போற்றி ‘வம்பார் குன்றம்’ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.

பண் : குறிஞ்சி

பதிக எண்: 99

திருச்சிற்றம்பலம்

1069. வம்பார்குன்றம் நீடுயர்சாரல்

வளர்வேங்கைக்

கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய்

குற்றாலம்

அம்பானெய்யோ டாடலமர்ந்தா

னலர்கொன்றை

நம்பான்மேய நன்னகர்போலும்

நமரங்காள். 1

____________________________________________________

1. பொ-ரை: நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், அழகிய வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளையும் உடைய குற்றாலம், இனிய பால் நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனாய் விரிந்த கொன்றை மலர்களைச் சூடிய நம்பனாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.

கு-ரை: திருக்குற்றாலம், பால்நெய்யாடிய பரமன் உறைகோயில் என்கின்றது. வம்பு - புதுமை, வம்பார்குன்றம் - பலமுறை கண்டார்க்கும் புதுமையையே பொருந்தும் மலை. நீடு உயர் சாரல் - காலத்தானும் இடத்தானும் நீடிக்கும் சாரல். கோல வண்டு - அழகிய வண்டு. பால் நெய்யோடு - பால் நெய் இவற்றோடு. அம் ஆடல் அமர்ந்தான் - நீராடலை விரும்பியவன். நமரங்காள் - நம்மவர்களே!