பக்கம் எண் :

996திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


101. திருக்கண்ணார்கோயில்

பதிக வரலாறு:

சீகாழியை விட்டுத் தாதையார் முதலியவர்கள் உடன் போத அடியார்கள் வாழ்த்தொலி எடுத்துவரத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருக்கண்ணார்கோயிலை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனை, "தண்ணார் திங்கள்" என்னும் திருப்பதிகத்தால் தோத்திரித்தார்.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 101

திருச்சிற்றம்பலம்

1091. தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ்

புனல்சூடிப்

பெண்ணாணாய பேரருளாளன்

பிரியாத

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்

கிடர்பாவம்

நண்ணாவாகுந் நல்வினையாய

நணுகும்மே. 1

____________________________________________________

1. பொ-ரை: குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.

கு-ரை: திங்களும் பாம்பும் கங்கையும் சிரத்தில் அணிந்து பெண்ணுமாய் ஆணுமாயிருக்கின்ற பேரருளாளனது கண்ணார் கோயிலைக் கைதொழுவார்களுக்கு இடரும் பாவமும் இல்லை; நல்வினை நணுகும் என்கின்றது. தண்ணார் திங்கள் - குளிர்ந்த மதி. இடர் பாவம் - துன்பமும் அதற்குக் காரணமாகிய பாவங்களும்.